சுதந்திர அரசே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்க்கான ஒரே வழி – ஊடக அறிக்கை

Saturday, December 11, 2010

சுதந்திர அரசே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்க்கான ஒரே வழி

இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருகின்ற, உலகெங்குமுள்ள பல்லாயிரம் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொள்ளுகின்றது. ஜக்கியநாடுகள் அமைப்பானது 1948ம் ஆண்டு மார்கழி மதம் 10ம் திகதியில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட தினத்தை இந்த நாள் குறிக்கும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உலகெங்குமிருந்த நாடுகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் பாரிய அளவிலான கொலைகளும் யுத்தமும் நடைபெறாதிருக்கும் வகையிலும் மனித உரிமைகளில் பாதுகாப்பதற்கு ஏற்றதுமான புதியதோர் ஒழுங்கமைப்பினை உருவாக்க விழைந்தன. ஹிட்லர் தலைமையின் கீழ் இயங்கிய ‘நாசி’ ஜேர்மனியானது 60 இலட்சம் வரையிலான யூதர்களைக்கொன்று குவித்தார்கள் என்பதையறிந்த இந்நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்தன. யூதர்கள், அவர்கள் அவ்வினத்தவர்கள் என்ற காரணத்திற்காக கொல்லப்பட்டார்கள். எதிர்காலத்தில் எவரும் இனத்தின் அடிப்படையிலோ மத அடிப்படையிலோ இவ்வாறு கொலை செய்வதை தங்கள் எவ்வகையிலும் அனுமதிக்கப்போவதில்லை என இந்நாடுகள் உறுதி பூண்டன. ‘ மீண்டும் நடக்காது’ எனும் குரலே அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடத்தின் அடிநாதமாய் அமைந்தது.

யூதர்களைப் போன்று ஈழத்தமிழர்களும் இனக்குழுமம் என்னும் அடிப்படையிலே பெரும் தொகையாகக் கொல்லபட்டுளார்கள். நாங்கள் 1958ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் வரை பல் வேறு சிங்கள அரசாங்கங்களினால் நடாத்தப்பட்ட பாரிய அளவிலான கொலைகளைக் கண்டுள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டு;ம் மீண்டும் நடந்தேறிய கொலைகள் கற்பழிப்புகள் மற்றும் அநீதிகளை நாங்கள் சந்தித்துள்ளோம். ஒரு மாத காலத்தில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 60,000 மேலான அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். வைத்திய சாலைகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் போடப்பட்டன. போரினுள் அகப்பட்டுக்கொண்ட தமிழர்களுக்கு உணவு போகாமல் தடுக்கப்பட்டது. அத்துடன் உணவும் ஒரு பேராயுதமாகப் பாவிக்கப்பட்டது. ஜக்கியநாடுகள் அமைப்பின்படி பலர் பட்டினியால் இறந்தனர்.

செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலக செயற்குழுவை(ICRC) காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்காதவாறு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்தது. அதனால் சிகிச்சை பெற முடியாத பலர் இரத்தம் ஓடுவதை நிறுத்த முடியாமல் இறந்தார்கள். மக்கள் ஓடியபோது தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த தடுப்பு முகாம்களில் இருந்தவர்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக் கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள்.

2010ம் ஆண்டு மார்கழி 10ம் திகதி நினைவு கூரப்படும் மனித உரிமை தின கருப்பொருள் ‘பாகுபாட்டினை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் இயங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள்’ என்பதாகும். பாகுபாட்டிற்கு எதிராக இயங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் பெரும்பாலும் தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல்களின் மத்தியில்தான் செயல்படுகின்றார்கள். அவர்கள் இத்தினத்தில் நன்கு மதிக்கப்படுவதுடன் பாராட்டுக்கும் உள்ளாகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்து வருகின்ற அநீதிகளுக்கும் அனைத்துலக சட்டங்களை மீறும் செயற்பாடுகளுக்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்தற்காகவும் தொடர்ந்தும் அவ்வாறு கருத்துக்களைக் கூறி வருவதற்காகவும் மனித உரிமைப் பாதுகாவலர்களை நாடுகடந்த அரசாங்கமானது மதிப்பதுடன் பெருமைப்படுத்துகின்றது. இத்தகைய நெஞ்சுரம் கொண்டவர்கள் சிறிலங்கா தீவினிலும் வெளிநாடுகளிலுமிருந்து கொண்டு, நீதிக்காக வாதாடி வருவதுடன் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப் படுவர்களையும் பாதுகப்பதற்;காக முயன்று வருகிறார்கள். அநீதியை இழைப்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறல் வேண்டும் எனவும், அரசாங்க நடவடிக்கைகள் ஒளிவு மறைவின்றி நடைபெறல் வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள். இவ்வாறு செயற்படுவதால் அவர்களது வாழ்வும் அவர்களது குடும்பத்தினரது வாழ்வும் அடிக்கடி ஆபத்துக்குள்ளாகின்றன.

சிறிலங்கா தீவில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் சுதந்திரமாக தமது அரசியல் இறைமையை செயற்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டும் உள்ள எமது உறவுகளுக்கு பக்கபலமாக நிற்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினராகிய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கமானது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றைப் புரிந்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கடந்த சில மாதங்களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. சர்வதேச சமூகம் இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலை ஏற்படுவதற்கு இன்னும் எத்தனை அழுகுரல்கள் தேவையோ? பெரும் தொகையானவர்கள் இறந்துள்ளார்கள் எனும் நிலை தோன்றுவதற்கு இன்னும் எத்தனை ஈழத்தமிழர்கள் தம்முயிரை ஆகுருதியாக்க வேண்டுமோ? சுதந்திரஅரசு ஒன்றினை நிறுவுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்களை அழிவிலிருந்து காப்பற்றிக்கொள்ளமுடியும் என்ற உண்மை நிலையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனைத்துலக சமுதாயத்தினால் புறம் தள்ள முடியும்?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மட்டத்திலும், நாடுகள் மட்டத்திலும் உபயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான வழிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனை அது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் என்பனவற்றிற்கான தனது அமைச்சின் ஊடாக தற்போது செய்துவருகின்றது. மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இனப்படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச நியமனசபை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது.

இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள்,
போர்க்குற்றவிசாரனைக்குமான விவகார அமைச்சு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

0 comments:

Post a Comment

Thaynilam Tamil Newspaper » ஆய்வுகள்