சிறையில் இருந்து சீமான் விடுதலை

Saturday, December 11, 2010

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை மீனவர்களுக்கு எதிரான சில கருத்துகளை சீமான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
தன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, இன்று (10.12.2010) மதியம் 2.35 மணி


அளவில் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் வந்திருந்தனர். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் முழக்கம் அமைப்பைச் சேர்ந்த ஷாகுல் அமீது, இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், பேராசிரியர் தீரன், இயக்குநர் கௌதமன், இயக்குநர் பாலா, மதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி, மதிமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் டி.ராஜா. வேலூர் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் சீமானை கைகுலுக்கி கட்டி அணைத்து வரவேற்றனர்.
READ MORE - சிறையில் இருந்து சீமான் விடுதலை

சுதந்திர அரசே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்க்கான ஒரே வழி – ஊடக அறிக்கை

சுதந்திர அரசே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்க்கான ஒரே வழி

இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருகின்ற, உலகெங்குமுள்ள பல்லாயிரம் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொள்ளுகின்றது. ஜக்கியநாடுகள் அமைப்பானது 1948ம் ஆண்டு மார்கழி மதம் 10ம் திகதியில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட தினத்தை இந்த நாள் குறிக்கும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உலகெங்குமிருந்த நாடுகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் பாரிய அளவிலான கொலைகளும் யுத்தமும் நடைபெறாதிருக்கும் வகையிலும் மனித உரிமைகளில் பாதுகாப்பதற்கு ஏற்றதுமான புதியதோர் ஒழுங்கமைப்பினை உருவாக்க விழைந்தன. ஹிட்லர் தலைமையின் கீழ் இயங்கிய ‘நாசி’ ஜேர்மனியானது 60 இலட்சம் வரையிலான யூதர்களைக்கொன்று குவித்தார்கள் என்பதையறிந்த இந்நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்தன. யூதர்கள், அவர்கள் அவ்வினத்தவர்கள் என்ற காரணத்திற்காக கொல்லப்பட்டார்கள். எதிர்காலத்தில் எவரும் இனத்தின் அடிப்படையிலோ மத அடிப்படையிலோ இவ்வாறு கொலை செய்வதை தங்கள் எவ்வகையிலும் அனுமதிக்கப்போவதில்லை என இந்நாடுகள் உறுதி பூண்டன. ‘ மீண்டும் நடக்காது’ எனும் குரலே அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடத்தின் அடிநாதமாய் அமைந்தது.

யூதர்களைப் போன்று ஈழத்தமிழர்களும் இனக்குழுமம் என்னும் அடிப்படையிலே பெரும் தொகையாகக் கொல்லபட்டுளார்கள். நாங்கள் 1958ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் வரை பல் வேறு சிங்கள அரசாங்கங்களினால் நடாத்தப்பட்ட பாரிய அளவிலான கொலைகளைக் கண்டுள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டு;ம் மீண்டும் நடந்தேறிய கொலைகள் கற்பழிப்புகள் மற்றும் அநீதிகளை நாங்கள் சந்தித்துள்ளோம். ஒரு மாத காலத்தில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 60,000 மேலான அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். வைத்திய சாலைகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் போடப்பட்டன. போரினுள் அகப்பட்டுக்கொண்ட தமிழர்களுக்கு உணவு போகாமல் தடுக்கப்பட்டது. அத்துடன் உணவும் ஒரு பேராயுதமாகப் பாவிக்கப்பட்டது. ஜக்கியநாடுகள் அமைப்பின்படி பலர் பட்டினியால் இறந்தனர்.

செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலக செயற்குழுவை(ICRC) காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்காதவாறு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்தது. அதனால் சிகிச்சை பெற முடியாத பலர் இரத்தம் ஓடுவதை நிறுத்த முடியாமல் இறந்தார்கள். மக்கள் ஓடியபோது தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த தடுப்பு முகாம்களில் இருந்தவர்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக் கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள்.

2010ம் ஆண்டு மார்கழி 10ம் திகதி நினைவு கூரப்படும் மனித உரிமை தின கருப்பொருள் ‘பாகுபாட்டினை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் இயங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள்’ என்பதாகும். பாகுபாட்டிற்கு எதிராக இயங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் பெரும்பாலும் தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல்களின் மத்தியில்தான் செயல்படுகின்றார்கள். அவர்கள் இத்தினத்தில் நன்கு மதிக்கப்படுவதுடன் பாராட்டுக்கும் உள்ளாகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்து வருகின்ற அநீதிகளுக்கும் அனைத்துலக சட்டங்களை மீறும் செயற்பாடுகளுக்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்தற்காகவும் தொடர்ந்தும் அவ்வாறு கருத்துக்களைக் கூறி வருவதற்காகவும் மனித உரிமைப் பாதுகாவலர்களை நாடுகடந்த அரசாங்கமானது மதிப்பதுடன் பெருமைப்படுத்துகின்றது. இத்தகைய நெஞ்சுரம் கொண்டவர்கள் சிறிலங்கா தீவினிலும் வெளிநாடுகளிலுமிருந்து கொண்டு, நீதிக்காக வாதாடி வருவதுடன் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப் படுவர்களையும் பாதுகப்பதற்;காக முயன்று வருகிறார்கள். அநீதியை இழைப்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறல் வேண்டும் எனவும், அரசாங்க நடவடிக்கைகள் ஒளிவு மறைவின்றி நடைபெறல் வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள். இவ்வாறு செயற்படுவதால் அவர்களது வாழ்வும் அவர்களது குடும்பத்தினரது வாழ்வும் அடிக்கடி ஆபத்துக்குள்ளாகின்றன.

சிறிலங்கா தீவில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் சுதந்திரமாக தமது அரசியல் இறைமையை செயற்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டும் உள்ள எமது உறவுகளுக்கு பக்கபலமாக நிற்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினராகிய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கமானது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றைப் புரிந்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கடந்த சில மாதங்களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. சர்வதேச சமூகம் இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலை ஏற்படுவதற்கு இன்னும் எத்தனை அழுகுரல்கள் தேவையோ? பெரும் தொகையானவர்கள் இறந்துள்ளார்கள் எனும் நிலை தோன்றுவதற்கு இன்னும் எத்தனை ஈழத்தமிழர்கள் தம்முயிரை ஆகுருதியாக்க வேண்டுமோ? சுதந்திரஅரசு ஒன்றினை நிறுவுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்களை அழிவிலிருந்து காப்பற்றிக்கொள்ளமுடியும் என்ற உண்மை நிலையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனைத்துலக சமுதாயத்தினால் புறம் தள்ள முடியும்?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மட்டத்திலும், நாடுகள் மட்டத்திலும் உபயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான வழிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனை அது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் என்பனவற்றிற்கான தனது அமைச்சின் ஊடாக தற்போது செய்துவருகின்றது. மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இனப்படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச நியமனசபை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது.

இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள்,
போர்க்குற்றவிசாரனைக்குமான விவகார அமைச்சு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
READ MORE - சுதந்திர அரசே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்க்கான ஒரே வழி – ஊடக அறிக்கை

அடையாளம் காணப்பட்ட இசைப்பிரியா, இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகின்றது -சனல்4 தொலைக்காட்சி

சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) இரவு 7:00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 அகவுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் (9 வருடங்கள்) ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட செவ்வியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.
இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனவும், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் குறிப்பிடுகின்றார்.
இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.
கடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.
போராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்திருப்பதாக நம்பப்படுகின்றது.

READ MORE - அடையாளம் காணப்பட்ட இசைப்பிரியா, இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகின்றது -சனல்4 தொலைக்காட்சி

Thaynilam Tamil Newspaper » ஆய்வுகள்